உடல் உழைப்பில்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருப்பவர்களுக்கு கொரோனா பாதித்தால் ஆபத்து என்ற அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.
பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் கடந்த செவ்வாய்கிழமை அன்று புதிய ஆய்வு முடிவை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட சுமார் 50,000 நபர்களை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் உடற்பயிற்சி பற்றாக்குறை உள்ளவர்கள் மிகக் கடும் அறிகுறிகளுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் பாதிப்படைந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது கொரோனா தொற்று ஏற்படுவதற்கு முன் குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு உடல் செயலற்ற நிலையில் வாழ்ந்தவர்களுக்கு எளிதில் பாதிப்படையவும், உயிரிழக்கும் அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் கொரோனா தொற்றால் எளிதில் பாதிக்கப்படுபவர்கள் உடல் பருமன், புகைப்பிடித்தல் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகிய ஆபத்தான காரணங்களுடன் ஒப்பிடுகையில் உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு தான் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று கூறுகின்றனர்.
அதாவது ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டும், படுத்துகொண்டும் நொறுக்கு தீனிகளை சாப்பிடுவது, மொபைல் போனிலேயே கிடப்பது போன்று எந்த வித உடல் உழைப்பும் செய்யாமல் 24 மணி நேரமும் படுக்கையில் கிடக்கும் நபர்களுக்கு கொரோனாவால் அதிக ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
எனினும் அதிக உடல் உழைப்பு கொண்டவர்களில் சுமார் 32 சதவீதம் பேர் உயிரிழந்திருக்கின்றனர். மருத்துவமனையில் சுமார் 20 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் 10 சதவீதம் பேர் உள்ளனர் என்று ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.