பெரம்பலூரில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் மற்றும் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டி ஆகியவற்றை திருடிச் சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அணைப்பாடி கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முரளி என்ற மகன் உள்ளார். இவர் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். திருமணம் முடிந்த பிறகு மகேஸ்வரியும், முரளியும் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பின்புறத்தில் உள்ள வெங்கடேசபுரம் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்துள்ளனர். அங்கிருந்து அவர் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஆண் குழந்தை ஒன்று உள்ளது. மகேஸ்வரி மீண்டும் கர்ப்பமான நிலையில் இரண்டாவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
இதனால் ஆணைப்படி கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு மகேஸ்வரி சென்றுள்ளார். கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் முரளி செய்தார். இதையடுத்து கடந்த 9-ஆம் தேதி ஓய்வெடுப்பதற்காக ஊட்டிக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த 12-ஆம் தேதி வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நிலையில் இருந்துள்ளது. அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் முரளிக்கும், அவரது மனைவி மகேஸ்வரிக்கும் இதுகுறித்து செல்போனில் தகவல் அளித்துள்ளனர். மேலும் பெரம்பலூர் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மகேஸ்வரி அணைப்பாடியில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அதன்பின் வீட்டிற்கு உள்ளே சென்று சோதனை செய்து பார்த்தார். அப்போது பீரோவில் ரூ.60,000 மற்றும் 5 பவுன் நகை ஆகியவை திருடு போனது தெரியவந்தது. மேலும் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டரையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து பெரம்பலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.