நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே வாய்க்காலில் மீன்பிடி வலையில் 4 கிலோ எடையிலான உலோக விநாயகர் சிலை சிக்கியது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மகாராஜபுரம் கிராமத்தில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடி வலையை கொண்டு அப்பகுதியில் உள்ள வாய்க்காலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது கனமான பொருள் ஒன்று வலையில் சிக்கியது. இதனால் அவர் சந்தேகத்தில் வலையை மேலே இழுத்து பார்த்தார். அப்போது சுமார் 4 கிலோ எடையில் 1 அடி உயரத்தில் மீன்பிடி வலையில் விநாயகர் சிலை ஒன்று சிக்கியது. அந்த விநாயகர் சிலை நடனமாடும் நிலையில் உள்ளது. மேலும் அது நர்த்தனவிநாயகர் சிலை என்பது தெரியவந்தது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சுகந்தியிடம் அந்த சிலை ஒப்படைக்கப்பட்டது.
அந்த சிலையை கிராம நிர்வாக அலுவலர் துணை தாசில்தார் ஜெயசீலன் மற்றும் தாசில்தார் ரமாதேவி ஆகியோரிடம் ஒப்படைத்தார். நாகை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் அங்கு வந்த பிறகுதான் அந்த சிலை எந்த உலகத்தால் செய்யப்பட்டது ? எந்த காலத்தை சேர்ந்தது ? என்பது தெரியவரும். மேலும் அது வீட்டில் பூஜைக்கு வைத்திருந்த சிலையா ? கோவிலிலிருந்து திருடப்பட்டதா ? என்பது தெரியவில்லை. விசாரணைக்கு பிறகு தான் இது குறித்த முழுமையான விவரங்களும் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.