டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்த டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.
சீ னாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டன. அதன் பிறகு தற்போது வரை நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வந்தது.
அதனால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், குஜராத், கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 18 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. மேலும் ஒரே நாளில் 104 உயிர் இழந்ததால் மக்கள் அனைவரும் கொரோனா பீதியில் உள்ளனர். கொரோனா அதிகரிப்பால் ஆளுநர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இதனையடுத்து இன்று நடத்தப்பட்ட அவசர கூட்டத்தில், டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக வார இறுதி நாட்களில், அதாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல் படுத்த டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மால்கள், திரையரங்குகள் மற்றும் உணவகங்கள் அனைத்தும் மூடவும் எச்சரித்துள்ளது.