நாகப்பட்டினம் மாவட்டத்தில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை தேசிய துப்புரவு பணியாளர் ஆணைய தலைவர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கடந்த 9-ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள காட்டு நாயக்கன் தெருவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20 வீடுகள் நாசமாகின. மேலும் வீடுகளில் இருந்த மின்விசிறி, டிவி, சமையல் பாத்திரங்கள், செல்போன், பாடப்புத்தகங்கள், துணிகள், வங்கி கணக்கு புத்தகங்கள், கல்வி சான்றிதழ்கள், ரேஷன் கார்டுகள், ஆதார் மற்றும் பீரோவில் இருந்த நகை, பணம் உள்ளிட்ட பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. எனவே தங்களுக்கு இழப்பீடு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் தேசிய துப்புரவு பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேஷ் தீ விபத்து நடந்த காட்டுநாயக்கன் தெரு பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் அங்கு இருந்தவர்களிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். அப்போது பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அதற்கு அவர் விரைவில் உங்கள் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்யப்பட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். தேசிய துப்புரவு பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேஷ் பாதிக்கப்பட்டவர்களுக்காக உணவு தயார் செய்யும் இடத்தையும் பார்வையிட்டார்.