குடிபோதையில் கர்ப்பிணியான தனது மகளை தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூலாக் குண்டா மாதையன் தொட்டி பகுதியில் அருணாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு வெங்கடலட்சுமி என்ற மகள் உள்ளார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் வசித்து வரும் சீனிவாசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கும் வெங்கடலட்சுமி யுகாதி பண்டிகை விருந்துக்காக தனது கணவருடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து சீனிவாசன் வெளியே சென்ற பிறகு, மது போதையில் வீட்டிற்கு வந்த அருணாச்சலம் தனது மனைவியுடன் வாக்குவாதம் செய்துள்ளார்.
அப்போது கோபமடைந்த அருணாச்சலம் தான் வைத்திருந்த துப்பாக்கியால் மாதேவியை சுட முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் வெங்கடலட்சுமி தனது தாயைக் காப்பாற்றுவதற்காக குறுக்கே சென்ற போது நாட்டு துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டுகள் வெங்கடலட்சுமியின் மீது பாய்ந்துவிட்டது. இதில் வெங்கடலட்சுமி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெங்கட லட்சுமியின் உடலை கைப்பற்றி தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய அருணாச்சலத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.