தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அந்தேவணபள்ளி கிராமத்தில் வேலன் என்ற பொக்லைன் ஆப்பரேட்டர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வேலனின் மனைவி வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்த போது, அவர்களது ஒன்றரை வயது ஆண் குழந்தை தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளியில் விளையாடி கொண்டிருந்தது.
அந்த சமயம் வீட்டிற்கு வேலையை முடித்துவிட்டு வந்த வேலன் தனது மனைவியிடம் குழந்தையை காணவில்லை என்று கேட்டுள்ளார். இதனையடுத்து கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தேடும்போது, குழந்தை அங்கிருந்த தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து தத்தளித்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த தேன்கணிகொட்டை காவல்துறையினர் மருத்துவமனைக்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தேன்கணிகொட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.