திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ ஆயிரம் விளக்கு உசேன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த திமுகவின் முன்னாள் எம்எல்ஏ உசேன் என்பவர் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். இவர் திமுகவின் தலைமை நிலைய முன்னாள் செயலாளராக இருந்தவர். கடந்த 2001 ஆம் ஆண்டு இவரது துடிப்புமிக்க செயல்களாலும், கட்சியின் மீது கொண்ட ஆர்வத்தினாலும், மக்களிடம் தொடர் செல்வாக்கைப் பெற்றிருந்ததன் காரணமாகவும், திருவல்லிக்கேணி தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் மறைந்த முன்னாள் எம்எல்ஏ ஆயிரம் விளக்கு உசேன் அவரது உடலுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியுள்ளார். இவரைத் தொடர்ந்து திமுக எம்.பி தயாநிதி மாறன் உசேனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்ததோடு, உசேனின் இறப்பு திமுகவிற்கு மிகப் பெரிய இழப்பு என்று தெரிவித்துள்ளார். மேலும் எம்எல்ஏ பதவி காலம் முடிந்த பின்பும் மக்களுக்காக தொடர் பணியாற்றியதால் மக்களுக்கும் திமுகவிற்கும் இடையே ஒரு நற்பாலத்தை ஏற்படுத்தியதில் உசேனின் செயல்பாடுகள் முக்கிய இடத்தை வகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.