தனியார் பள்ளிகளுடன் போட்டி போடும் விதமாக அரசு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே ஓடைக்காடு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த இரண்டு வருடங்களாக 18 மாணவர்கள் மட்டுமே பயின்று வந்தனர். இதனை கருத்தில்கொண்டு அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று பெற்றோரிடம் சி.பி.எஸ்.சி தரத்திற்கு இணையான தமிழக அரசின் புதிய பாடத் திட்டத்தை பற்றி எடுத்துரைத்துள்ளனர்.
மேலும் LKG மற்றும் UKG வகுப்புகள் ஆங்கிலவழிப் பாடத்திட்டத்தின் வாயிலாக தொடங்கப்பட்டிருப்பதையும், மாணவர்களுக்கான பேருந்து வசதிகள், பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகள், இசை, நாட்டியம் யோகா போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுவது பற்றியும் எடுத்துரைத்தனர்.
இந்நிலையில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எளிமையாக புரியும் வகையில் பாடம் நடத்தி வந்ததால் இந்தாண்டில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் தனியார் பள்ளிகளுக்கு போட்டியாக மாணவர்களின் எண்ணிக்கை அடுத்த ஆண்டு பலமடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.