திண்டுக்கல்லில் துணை நடிகர் வீட்டில் பணம் மற்றும் நகையை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இ.பி.காலனியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு சில படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் வீட்டில் இருந்துள்ளார். இவருடைய மனைவி தையல் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று தையல் கடையில் கணவன், மனைவி இரண்டு பேரும் இருந்தனர். அவ்வப்போது தையல் கடையில் இருந்தபடி வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இதற்கிடையே முருகன் சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு திரும்பி வந்தார்.
அப்போது அனைத்து பொருள்களும் வீட்டுக்குள் சிதறிய நிலையில் இருந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பீரோவை ஆய்வு செய்து பார்த்தார். அப்போது ரூ.2,000, ஆறு தங்க காசுகள், 2 பவுன் நகைகள் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திண்டுக்கல் காவல் நிலையத்தில் முருகன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.