தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.
ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கமேலும் பல கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர். இரவு நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்துவது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.