திண்டுக்கல்லில் கணவர் மது போதையில் தகராறு செய்ததால் காதல் மனைவி துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கருதிகவுண்டன்பட்டியில் தீனா (27) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆம்னி வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர் அதே பகுதியை சேர்ந்த உறவினரான கீர்த்தனா (20) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு காவியா (1) என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது. தீனாவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தினமும் வீட்டிற்கு மதுபோதையில் வருவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் கீர்த்தனாவுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மனைவியிடம் வழக்கம்போல் தகராறு செய்துள்ளார்.
அதன் பின் வெளியே சென்று விட்டார். இதில் மன வேதனையடைந்த கீர்த்தனா தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கூம்பூர் காவல்துறையினர் கீர்த்தனாவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி கீர்த்தினாவுக்கு இரண்டு வருடங்களே ஆவதால் உதவி ஆட்சியர் ஆனந்தியிடம் விசாரணைக்காக பரிந்துரைக்கப்பட்டது.