சித்திரை மாத கார்த்திகை உற்சவம் பழனி முருகன் கோவிலில் நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் கார்த்திகை உற்சவ விழா ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வருகிறது. அதன்படி கார்த்திகை உற்சவ விழா இந்த மாதத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதை முன்னிட்டு அதிகாலை 4 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. அதன் பின் முருகப்பெருமானுக்கு 4.30 மணி அளவில் விளாபூஜையில் சந்நியாசி அலங்காரமும், வேடர் அலங்காரம் 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையிலும் நடைபெற்றது.
அதன் பின் பாலசுப்ரமணியர் அலங்காரம் 9 மணிக்கு காலசந்தி பூஜையில் நடைபெற்றது. உச்சிகால பூஜையில் வைதீகர் அலங்காரம் 12 மணிக்கு செய்யப்பட்டது. சாயரட்சை பூஜையில் ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் மாலை 5.30 மணிக்கு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பழனி முருகன் கோவிலில் சித்திரை மாத கார்த்திகை உற்சவத்தை முன்னிட்டு சிறப்பு தரிசனம், தர்ம தரிசனம் கால பூஜை தரிசனம், கட்டளை தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலுக்கு வருகை தந்தனர்.