மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் முடங்கியுள்ளன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். சில மாதங்களாக இதனில் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் இரண்டாவது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. அதிலும் மகாராஷ்டிராவில் இந்த அலை சூறாவளி போன்று அடித்து வருகின்றது. நாட்டிலேயே கொரோனா பாதிப்பால் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் இருக்கின்றது.
இங்கு தினசரி 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் வரை கொரோனா நோயால் பாதிக்கப்படுகின்றனர். அதனால் மாநிலத்தில் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை எட்டி சென்றுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் நோய் பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பலத்த கட்டுப்பாடுகளை கடந்த 13-ஆம் தேதி இரவு முதல் மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. மாநில அரசின் உத்தரவின்படி பொதுமக்கள் தேவை இன்றி அனாவசியமாக வெளியே செல்லக் கூடாது. இந்த உத்தரவின்படி நேற்று முன்தினம் இரவு முதல் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். பெரும்பாலான மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை முற்றிலும் தவித்தனர். அதனால் எப்போதும் வாகன நெரிசல் நிறைந்த சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
மார்க்கெட் பகுதிகளிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டது . காய்கறி மற்றும் மளிகை கடைகள் மட்டுமே கட்டுப்பாடுகள் அடிப்படையில் திறக்கப்பட்டு இருந்தன. கட்டுப்பாடுகளுடன் ஆட்டோக்கள் இயக்க அனுமதிக்கப்பட்டிருந்தது அதன்படி ஆட்டோ டிரைவர் மற்றும் இரண்டு பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும் அத்தியாவசிய பணிக்கு நகரில் பஸ் ரயில் சேவைகள் விதிமுறைகளை பின்பற்றி இயக்கப்பட்டன. வெளியூர் செல்லும் ரயில்கள் வழக்கம் போல் ஓடின.
ஊரடங்கு அமலுக்கு வந்ததால் வெளிமாநில தொழிலாளர்கள் தொடர்ந்து தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து கிளம்பினர். இதற்கிடையே நேற்று மும்பையில் காவல்துறையினர் தீவிர பணியில் ஈடுபட்டு விதிகளை மீறி சென்றவர்களை பிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். உரிய காரணங்கள் இன்றி பயணம் செய்தவர்களை காவல்துறையினர் எச்சரித்து வீட்டுக்குத் திருப்பி அனுப்பினர்.
அதில் தாராவி உள்ளிட்ட பகுதிகளில் மாலை நேரத்தில் பொதுமக்கள் அதிக அளவில் வெளியே வருகின்றனர். பல கட்டுப்பாடுகளை மீறி முககவசம் கூட அணியாமல் சுற்றித்திரிந்து வருகின்றன. அதேபோல நேற்று தானே, புனே உள்பட மாநிலம் முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளன.
மாநில அரசின் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக மும்பை உள்பட மாநிலம் முழுவதும் சுமார் 2 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் கூடுதலாக 13,200 ஊர்க்காவல் படை வீரர்கள், மாநில ரிசர்வ் படையைச் சேர்ந்த 22 நிறுவன காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தயார் நிலையில் உள்ளனர். மகாராஷ்டிராவில் இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் மே 1 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.