கொரோனா தொற்று தொடங்கியதிலிருந்து ஒரு ஆண்டு காலமாக சுப்ரீம் கோர்ட்டில் காணொளி விசாரணை மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றது.
கொரோனா நோய்தொற்று தொடங்கியதிலிருந்து ஒரு ஆண்டுக்கு மேல் சுப்ரீம் கோர்ட்டில் காணொளி விசாரணை மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றது. சுப்ரீம் கோர்ட்டுக்கு சில நீதிபதிகள் மட்டும் வந்து காணொளி வாயிலாக வழக்குகளை விசாரித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு குடியிருப்புகளில் இருந்து காணொலி வாயிலாக விசாரணையில் பங்கேற்கின்றனர்.
அதனிடையே, கொரோனாவின் இரண்டாவது அலை திடீரென மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இந்த நோய்த்தொற்று சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் பணிபுரியும் 44 ஊழியர்களுக்கு கடந்த சனிக்கிழமை அன்று கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சுப்ரீம் கோர்ட்டின் வளாகம் முழுவதும், நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற அறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றது.
நீதிபதிகள் தங்களுடைய குடியிருப்புகளில் இருந்து காணொளி வாயிலாக வழக்குகளை விசாரணை செய்வார்கள். அதனால், காலை 10.30 மணிக்கு தொடங்கி நடைபெறும் அமர்வுகள் 11.30 மணி அளவில் தொடங்கும் என்றும், 11 மணிக்கு தொடங்கி நடைபெறும் அமர்வுகள் 12:00 மணிக்கு தொடங்கும் என திங்கட்கிழமை அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் பொது நிர்வாகத்திற்கான உதவி பதிவாளர் சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் கீழ்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. சுப்ரீம் கோர்ட் வளாகத்துக்குள் வரும் பதிவாளர் அலுவலக ஊழியர்கள், காவல் துறையினர் உள்ளிட்ட ஒருங்கிணைப்பு துறை அதிகாரிகள், வக்கீல்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் உள்ளிட்டோர் ஆகியோருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் நடத்தப்படும்.
சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கட்டாயம் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சானிடைசர்களை பயன்படுத்தி கைகளை கழுவுதல் ஆகியவற்றை கடைப்பிடிப்பதை அவர்களின் மேல் அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். காய்ச்சல், இரும்பல், உடல் சோர்வு, உடல் வலி, நுகர்ச்சி தன்மையை இழத்தல் போன்ற அறிகுறிகளை கொண்டவர்கள் சுப்ரீம் கோர்ட் வளாகத்துக்குள் வராமல் உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தி மருத்துவரை நாடவேண்டும்.
சுப்ரீம் கோர்ட் வளாகத்துக்குள் தேவை இல்லாமல் நடமாடுவது, கூட்டம் கூடுவ,து சுற்றி திரிவது கட்டாயம் கூடாது. சுப்ரீம் கோர்ட் வளாகத்துக்குள் இருக்கும் லிப்டில் அதிகபட்சம் மூன்று பேர் மேலே செல்ல வேண்டும். கீழே இறங்குவதற்கு படிக்கட்டுகளை பயன்படுத்த வேண்டும்.