சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா பரவலை கண்காணிக்க 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று தடுப்பிற்க்கான கட்டுப்பாட்டு அறை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது. மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நேற்று முன்தினம் அந்த அறையை ஆய்வு செய்தார். மேலும் கட்டுப்பாட்டு அறையில் பராமரிப்பு பதிவேடுகளையும் பார்வையிட்டார். அதன்பின் அவர் கூறியதாவது, தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் வைரஸ் பாதிப்பை குறைக்க பொதுமக்களுக்கு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வைரஸ் பாதிப்பை எந்த வகையில் குறைக்க முடியுமோ அந்த அளவிற்கு பல்வேறு துறைகள், மருத்துவத்துறையினருடன் ஒருங்கிணைந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு ஏதுவாக 24 மணிநேரமும் கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவர்கள் தலைமையிலான குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இப்பணியில் கட்டுப்பாட்டு அறையில் இருந்து நாள்தோறும் மருத்துவ அலுவலர்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்கள் ஆகியவற்றிலிருந்து பொதுமக்களுக்கு மேற்கொள்ளும் கொரோனா பரிசோதனை குறித்து பதிவு செய்து கண்காணிக்க வேண்டும். எத்தனை நபர்களுக்கு பரிசோதனை முடிவில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த விவரமும் பதிவு செய்வார்கள். அரசு மருத்துவமனையில் எத்தனை நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள், தனியார் மருத்துவமனையில் எத்தனை பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்ற விவரத்தையும் கண்காணிப்பார்கள் என்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.