பஞ்சு மில் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குட்டை காடு பகுதியில் திரு மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் நூல்மில் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தொழிலாளிகள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மின்கசிவு காரணமாக மிக்ஸிங் குடோனில் இருந்த கழிவு பஞ்சில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது. இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறி வெள்ளகோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த விபத்தில் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான கழிவு பஞ்சுகள் தீயில் எரிந்து நாசமாகி விட்டது. அதோடு தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு பற்றி எரிந்த தீயை அணைத்ததால் அருகிலிருந்த குடியிருப்பு பகுதிக்குள் தீ பரவாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.