மயிலாடுதுறை மாவட்டம் பனங்குடி கிராமத்தில் உள்ள சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பனங்குடி கிராமத்தில் சிறப்பு வாய்ந்த சீதளாதேவி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் தீமிதி திருவிழா நடைபெறும். இந்த வருடத்திற்கான தீமிதி திருவிழா கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு குங்குமம், மஞ்சள், சந்தனம், பால், தயிர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது.
அதன் பின்னர் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் காவடி, அலகு காவடி ஆகியவைகளை தங்களது நேர்த்திக்கடனை நிறைவு செய்யும் வகையில் மேளதாளம் மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று தீ மிதித்தனர். சிலர் தோளில் தங்களது குழந்தைகளை சுமந்து வந்து தீ மிதித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.