திண்டுக்கல் மலைக்கோட்டையில் கொரோனா பரவல் எதிரொலியாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
கொரோனா பரவல் நாடு முழுவதும் அதிகரித்து கொண்டே வருகிறது. அதன் பரவலை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கல்லூரி, பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாடு முழுவதும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் புராதன இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மே 15-ஆம் தேதி வரை அவற்றை மூடும்படி கடந்த 11-ஆம் தேதி மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. அதனை தொடர்ந்து தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் நாடு முழுவதும் இருக்கும் புராதன இடங்கள் அனைத்தும் நேற்று முன்தினம் முதல் மூடப்பட்டன. திண்டுக்கல்லில் வரலாற்று சிறப்புமிக்க மலைக்கோட்டை உள்ளது.
இந்த மலைக்கோட்டை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. சுற்றுலா பயணிகள் இங்கு தினமும் வந்து செல்கின்றனர். மேலும் சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் அதிக அளவில் வருகின்றனர். அவ்வப்போது சினிமா படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மலைக்கோட்டைக்கு கொரோனா பரவலால் சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு மலைக்கோட்டையின் நுழைவு வாயில் பூட்டப்பட்டது. மே மாதம் 15-ஆம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று அங்கு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்றுமுன்தினம் மலைக்கோட்டைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.