திண்டுக்கல்லில் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்துப்பட்டியில் சிவசங்கர் என்பவர் வசித்து வந்தார். இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு ஷோபனா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சிவசங்கருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் ஷோபனா கோபத்தில் குழந்தைகளை அழைத்து கொண்டு பக்கத்து தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
அதனைத் தொடர்ந்து ஷோபனாவை வீட்டிற்கு வருமாறு சிவசங்கர் அழைத்துள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சிவசங்கர் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த திண்டுக்கல் காவல்துறையினர் சிவசங்கரின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.