திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்தினருடன் ஓய்வெடுப்பதற்காக வருகை தந்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. அதனை முன்னிட்டு தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டனர். அதேபோல் தமிழகம் முழுவதும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து சூறாவளிப் பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் அவர் தேர்தல் முடிந்ததையடுத்து தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலில் ஓய்வெடுக்க முடிவு செய்தார். அதன்படி சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் காலையில் மதுரைக்கு வந்தார். அதன் பின்னர் கொடைக்கானலுக்கு அங்கிருந்து கார் மூலம் மதியம் வருகை தந்தார். அவருடைய மகள் செந்தாமரை, மகன் உதயநிதி ஸ்டாலின், பேத்திகள், பேரன் மற்றும் குடும்பத்தினர் வந்தனர். அவர்களுக்கு முன்னாள் மாவட்ட பிரதிநிதி டார்லிங் அஜ்மல்கான், முன்னாள் நகர்மன்ற தலைவரும், நகர திமுக செயலாளருமான இப்ராஹிம் மற்றும் கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.
அதனை தொடர்ந்து பாம்பார்புரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு மு.க.ஸ்டாலினும், அவரது குடும்பத்தினரும் சென்றனர். அங்கு மு.க.ஸ்டாலின் மூன்று நாட்கள் தங்கி ஓய்வு எடுக்க உள்ளதாக திமுக பிரமுகர் ஒருவர் தெரிவித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு அப்பகுதியில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் வெளிநபர்கள் ஓட்டல் வளாகத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அவரை தி.மு.க.வினர் ஓட்டலுக்கு வெளியே நின்றபடியே வரவேற்றனர். அப்போது கட்சியினரை பார்த்து கைகூப்பி வணக்கம் தெரிவித்து விட்டு மு.க.ஸ்டாலின் ஓட்டலுக்கு சென்றார்.