நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிடுவது சட்ட விரோதமான செயல் என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழ் ராக்கர்ஸ் தமிழ் யோகி உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வெளியாகும் புதிய தமிழ் திரைப்படங்களை சட்டத்திற்குப் புறம்பாக தங்களது வலை தள பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஷால் உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள் ஏற்கனவே நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் இதுவரை எந்த ஒரு சரியான தீர்ப்பும் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது.
இந்நிலையில் நடிகர் அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட கூடாது என்று படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அதில், நேர்கொண்ட பார்வை திரைப்படமானது 100 கோடிக்கும் மேலான செலவில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அப்படத்திற்கான முழு காப்புரிமையை தான் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் படத்தை சட்டத்திற்குப் புறம்பாக திரையில் வெளியிடுவதன் மூலம் தனக்கு பொருளாதார அடிப்படையில் நஷ்டம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், மிகப் பெரிய மன உளைச்சலையும் தான் சந்திக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிடுவது சட்ட விரோதமான செயல் என்றும், இதனை மீறி வெளியிடுவோர் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.