மோட்டார் சைக்கிளின் மீது லாரி மோதிய விபத்தில் மகனை பார்க்க சென்ற தந்தை தலை நசுங்கி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வளப்பக்குடி பகுதியில் சங்கர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்துள்ளார். இவருக்கு ராமச்சந்திரன்,சரவணன் என்ற இரு மகன்களும், கீதா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் சங்கரின் மகனான சரவணன் என்பவருக்கு திருமணமாகி தற்போது கரூர் மாவட்டத்தில் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சரவணனுக்கு உடல்நிலை சரியில்லை என்று அவரது தந்தைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் சங்கர் தனது மகன் சரவணனை பார்ப்பதற்கு இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் கரூருக்கு புறப்பட்டு உள்ளார். இதையடுத்து சங்கர் திருச்சி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது.
இந்த விபத்தில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய சங்கரின் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அதன்பிறகு சங்கரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரை வலைவீசி தேடி வருகின்றனர் .