பெண்ணின் தாலி செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் தாம்பரம் அருகில் ரேணுகா நகர் பகுதியில் கீதா என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இவர் கடந்த 9ஆம் தேதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் கீதாவின் கழுத்தில் இருந்த நான்கு பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர்.
இதனால் கீதாவின் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அதில் குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளனர். மேலும் இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு அவர்களை மடக்கிப் பிடித்து விசாரித்துள்ளனர்.
இந்த விசாரணையில் கீதாவின் செயினை பறித்து சென்றது தினேஷ் மற்றும் கிரண்குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 4 பவுன் தங்கச்சங்கிலியையும் இருசக்கர வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர். மேலும் காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.