நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் காலமானார்.
அவரின் உடல் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆக விளங்கியவர். இவர் இறுதியாக 2020 ஆம் ஆண்டு தாராள பிரபு என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் சிறந்த நடிகருக்கான பத்ம ஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இதனையடுத்து அவரின் உடல் இன்று மாலை விருகம்பாக்கம் மின் தகன மேடையில் தகனம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் விவேக் மறைவுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், நடிகர் விவேக்கின் திடீர் மரணம் பலரை வேதனையடைய செய்துள்ளது. விவேக்கின் காமெடி நடிப்பும், வசன உச்சரிப்பும் மக்களை மகிழ்வித்தன. படங்களிலும் நிஜ வாழ்க்கையிலும் சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்திற்காக குரல் கொடுத்தவர். விவேக்கின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என அவர் பதிவிட்டுள்ளார்.