மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு ஏதுவாக நுழைவாயில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை நகரில் இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. அதில் சிதம்பரம், சென்னை, பூம்புகார், கும்பகோணம் ஆகிய முக்கிய வழித்தடங்களில் செல்லும் பேருந்துகள் அனைத்தும் காமராஜர் பேருந்து நிலையம் வந்து செல்லும். ஒருநாளைக்கு 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் நகரின் முக்கியமான இந்த பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த பேருந்து நிலையத்திற்கு இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து பயணம் செய்கின்றனர். இந்த பேருந்து நிலையத்தின் நுழைவாயில் அகலமாக இருந்தாலும் காவல்துறையினரின் காவல் கட்டுப்பாட்டு அறை அதில் ஒரு பகுதியில் உள்ளது. அதற்கு எதிர்புறம் நுழைவுவாயில் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இதனால் பேருந்து நிலையத்திற்குள் பொதுமக்கள் வந்து செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் பயணிகள் அடிக்கடி பேருந்துகள் உள்ளே நுழையும்போது ஒதுங்குவதற்கு இடம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். பேருந்து நிலைய நுழைவு வாயிலில் ஏற்கனவே நெருக்கடியின் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து மோதி பலர் உயிரிழந்துள்ளனர். எனவே கடைக்காரர்களின் ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்தி பேருந்து நிலைய நுழைவு வாயில் உள்ளே நுழைவதற்கும், பயணிகள் நடந்து செல்வதற்கும் ஏதுவாக இட வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.