தொடர் மழையால் சீர்காழி பகுதியில் உளுந்து அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட தென்பாதி, சீர்காழி, செம்மங்குடி, கீழ தென்பாதி, திருக்கருகாவூர், விநாயகக்குடி, எடமணல், கடவாசல், விளந்திட சமுத்திரம், வழுதலைகுடி, அத்தியூர், மருதங்குடி, பெருமங்கலம், ஆதமங்கலம், பெருமங்கலம், புங்கனூர், கன்னியாகுடி, திருப்புங்கூர், வடபாதி, திட்டை, சட்டநாதபுரம், காரைமேடு, தில்லைவிடங்கன் ஆகிய பல்வேறு பகுதிகளில் சம்பா நெல் அறுவடை செய்த பின்னர் விவசாயிகள் உளுந்து உள்ளிட்ட பயிறு வகைகளை சாகுபடி செய்திருந்தனர்.
இந்நிலையில் விவசாயிகள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த உளுந்து உள்ளிட்ட பயிறு வகைகளை ஒருவாரமாக அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த 14-ஆம் தேதி தொடர் மழையால் பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் திணறி வருகிறார்கள். மேலும் மழை நீரில் அறுவடை செய்யப்பட்ட உளுந்து நனைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். இதற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் உரிய காப்பீட்டு தொகையை காப்பீடு செய்த விவசாயிகளுக்கு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.