மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் லாரி டிரைவர் குடிபோதையில் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள செம்மங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு தெருவில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வமணி என்ற மகன் உள்ளார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 6-ஆம் தேதி தனது கூரை வீட்டில் குடி போதையில் தீ வைத்துள்ளார். அதில் வீடு முழுவதும் மளமளவென்று பற்றி எரிந்தது. அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் தீயை அணைத்தனர்.
இதில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீ விபத்தில் எரிந்து நாசமானது. அதே சமயம் வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. இதுகுறித்து தகவலறிந்து வந்த சீர்காழி காவல்துறையினர் வீட்டிற்கு தீ வைத்த செல்வமணியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.