புதுக்கோட்டை மாவட்டத்தில் நடிகர் விவேக் மரணத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை சுகாதரத்துறை அமைச்சர் மற்றும் விராலிமலை அ.தி.மு.க வேட்பாளர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் அ.தி.மு.க வேட்பாளர்கள் பார்வையிட்டுள்ளனர். அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது அவர் கூறியுள்ளதாவது, சின்ன கலைவாணர் என்று அழைக்கப்பட்ட நடிகர் விவேக்கின் மரணம் என்பது மிகப் பெரிய அதிர்ச்சியான தகவல். மரங்களை நடுவதில் மிகுந்த அக்கறை கொண்டவர். மேலும் பல விருதுகளை பெற்றிருக்கிறார். அவருடைய இறப்பிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இதனையடுத்து நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டது தான் காரணம் என்று மக்களிடையே வதந்தி பரவியுள்ளது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு விஜயபாஸ்கர் கூறியதாவது, 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் . தடுப்பூசியால் எந்த வித பக்கவிளைவும் இல்லை என்பதை பலமுறை கூறியுள்ளோம். மக்களுக்கு நம்பிக்கை என்பது அவசியம். அரசு துறை, மருந்து மற்றும் மருத்துவர்கள் மீது நம்பிக்கை வைப்பது அவசியம் அனைவரும் தடுப்பூசி கொள்ள வேண்டும். அதனை விவேக் மரணத்துடன் இணைக்க வேண்டாம் என்று நிருபர்களிடம் கூறியுள்ளார்.