சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கார் மோதியதில் தந்தை-மகன் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே கச்சாத்தநல்லூரில் முருகன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு வீரகெவின் பிரகாஷ் என்ற மகன் இருந்தார். அதே பகுதியில் வசித்து வந்தவர் தாமோதரன் (26). இவர்கள் 3 பேரும் கச்சாத்தநல்லூர் கிராமத்தில் சாலையோரம் கடந்த 15-ஆம் தேதி டீக்கடை அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து தாறுமாறாக வந்த கார் 3 பேர் மீதும் வேகமாக மோதியது. அதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தனர். சாலையோரம் உள்ள பள்ளத்தில் விபத்தை ஏற்படுத்திய கார் பாய்ந்து நின்றது.
அந்த காரை ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் ஓடிவந்து பார்த்தனர். ஆனால் அதற்குள் சம்பவ இடத்திலேயே தாமோதரனும், முருகனும் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த வீரகெவின் பிரகாஷை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டார். ஒரே கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இளையான்குடி காவல்துறையினர் விபத்தில் பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து இளையான்குடி காவல் நிலையத்தில் முருகனின் மனைவி கஸ்தூரி புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம் கீழப்பெருங்கரை கிராமத்தில் வசித்து வரும் மாப்பிள்ளைதுரை என்பவரது மகன் பிரசாந்த் என்ற பிரகாஷ் தான் காரை ஓட்டி வந்தது என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அவர் வைகை நகர் பகுதியில் பசு மாடுகள் மீது மோதியதாகவும், கீழக்கரையில் காரில் வந்தபோது பரமக்குடியில் ஒரு பெண் மீது மோதியதாகவும் புகார் எழுந்துள்ளது. அதன்பிறகு சாலையோரம் நின்று கொண்டிருந்த மூன்று பேரின் மீது மோதியுள்ளார் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.