சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே யாரும் கவனிக்காத நேரத்தில் வீடு புகுந்து செல்போனை திருடி சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சுப்ரமணியபுரம் 7-வது வீதியில், காரைக்குடி 100 அடி சாலையில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனத்தின் ஊழியர்கள் வாடகைக்கு வீடு பிடித்து தங்கியுள்ளனர். அங்கு மற்றவர்கள் தங்களது வேலைகளில் கவனமாக இருக்கும் போது ஒருவர் வீட்டின் உள்ளே நுழைந்து மேஜையில் இருந்த செல்போனை எடுத்து கொண்டு அங்கிருந்து சென்றார். அதனை கவனித்த மற்றொருவர் அவரை கூப்பிட்டு உள்ளார். ஆனால் அவர் செல்போனை திருடிவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
உடனே அவரை விரட்டி சென்ற ஜவுளி நிறுவன ஊழியர்கள் செல்போனை திருடியவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் ராமநாதபுரத்தில் வசித்து வரும் ஷாகுல்ஹமீது என்பது தெரியவந்தது. அதன்பின் அவரிடம் இருந்த செல்போன் மீட்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.