சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே மின்வயரை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அய்யம்பட்டியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் கடந்த டிசம்பர் மாதம் 2020-ல் தனது கிணற்றில் பம்பு செட்டுக்கு செல்லும் மின் கம்பம் சேதம் அடைந்ததாக மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது விவசாய பயிர்கள் வயலில் இருந்ததால் பணிகள் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
அதன் பின்பு சேகரின் பம்பு செட்டுக்கு செல்லும் மின்சாரத்தை கடந்த மார்ச் மாதம் 23-ஆம் தேதி அதிகாரிகள் துண்டித்துள்ளனர். அதனை அறிந்த மர்ம ஆசாமிகள் சிலர் ரூ.38 ஆயிரம் மதிப்பு கொண்ட மின்வயரை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து சாலைகிராமம் காவல்நிலையத்தில் சேகர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மின்வயர்களை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.