நகைச்சுவை நடிகர் விவேக்கின் கடைசி ஆசை நிறைவேறாமல் போனது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
நகைச்சுவை நடிகர் விவேக் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு நேற்று அதிகாலை 4.35 மணி அளவில் காலமானார். இவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது கடைசி ஆசை என்பது படங்களை இயக்க வேண்டும் என்பதாம். அது நிறைவேறாமலேயே அவர் இறந்து போனது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது “சமூக ஆர்வலர், பகுத்தறிவாளர், நகைச்சுவையாளர் மட்டுமல்லாது எதிர்காலத்தில் சிறந்த இயக்குனரையும் நாம் இழந்து விட்டோம். நடிகர் விவேக் கடந்த ஒரு மாத காலமாக எங்கள் நிறுவனத்திற்கு வந்து எங்கள் தயாரிப்பில் தான் அவருடைய முதல் படத்தை இயக்க வேண்டும் என விருப்பப்பட்டு கதை ஆலோசனையிலும் படப்பிடிப்பிற்கான முன்னேற்பாடுகளையும் நடிகர் நடிகைகளை தேர்வு செய்வதிலும் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இந்நேரத்தில் அவர் திடீரென காலமானது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நம்மிடம் காட்டும் முன்பே இறைவனடி சேர்ந்துவிட்டார். அவரது ஆன்மா சாந்தி அடைய நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.