திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பூட்டப்பட்டிருந்த முதியவர் வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே பள்ளப்பட்டியில் கமலம் (73) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு சம்பவத்தன்று வெளியூருக்கு சென்றுள்ளார். அதனை தொடர்ந்து கடந்த 15-ஆம் தேதி வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நிலையில் இருந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று ஆய்வு செய்தார். அப்போது பீரோவில் இருந்த ரூ. 15,000, ஒரு கிராம் மோதிரம், டி.வி. ஆகியவை திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் அம்மைநாயக்கனூரில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களை வைத்து தடயங்களை சேகரித்து, மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த மோப்ப நாய் சிறிது தூரம் ஓடி பள்ளப்பட்டி பிரதான சாலையில் நின்றது. ஆனால் யாரையும் அந்த நாய் கவ்வி பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து வீட்டில் பணம் மற்றும் நகையை கொள்ளடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.