முகநூலில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதலாக மாறியதில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் சின்னத்தோப்புத்தெருவில் அப்துல்வாகித் என்பவர் வசித்து வருகிறார். இவர் தலைமைக் கழக பேச்சாளராக அ.தி.மு.க.வில் உள்ளார். இவருக்கு அப்துல் பரீத் என்ற அண்ணன் உள்ளார். இவர் மே இரண்டாம் தேதி அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றியை சமர்ப்பிப்போம் என்று முகநூலில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு திருப்பத்தூர் அருகே வையகளத்தூரை சேர்ந்த திமுக தகவல் தொழில்நுட்ப ஒன்றிய அமைப்பாளர் ஹரிஹரசுதன் முகநூலில் பதில் கருத்து பதிவு செய்துள்ளார். அதில் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் அப்துல் பரீத் வீட்டிற்கு ஹரிஹரசுதன் மற்றும் சிலர் சென்றுள்ளனர்.
அங்கு தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து திருப்பத்தூர் காவல் நிலையத்தில் இருதரப்பினரும் புகார் அளித்துள்ளனர். இதற்கிடையே திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே அதிமுகவினர் கடந்த 15-ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு சென்ற காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவை சேர்ந்த 10 பேர் மீதும், அப்துல் வாகித் கொடுத்த புகாரின் பேரில் திமுகவைச் சேர்ந்த 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்