சிவங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பெற்றோர் கண்டித்ததால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிராமணகுறிச்சி கிராமத்தில் மாரீசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரன் என்ற மகன் இருந்தார். இவர் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதன்பின் சிகிச்சை பெற்று குணமடைந்தார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் விக்னேஸ்வரன் வெளியே ஊர் சுற்றி வந்துள்ளார். தற்போது கோடை காலம் நிலவி வருவதால் மீண்டும் மஞ்சள் காமாலை ஏற்படும் என்ற அச்சத்தில் விக்னேஸ்வரனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனால் விக்னேஸ்வரன் மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து இளையான்குடி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.