மாமல்லபுரம் சிற்பக் கலைஞர்கள் 3 அடி உயரத்தில் 340 தூண்களுடன் செய்யப்பட்ட ராமர் கோவில் மாதிரியை அயோத்திக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள மாமல்லபுர பகுதியில் மானசா மர சிற்ப கலைக்கூடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மரச் சிற்பக் கலைக்கூடத்தில் ஶ்ரீராமஜென்ம தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை சேர்ந்த சிலர் வருகை தந்துள்ளனர். அவர்கள் அங்கு மரசிற்பம் செய்யும் கலைஞர்களிடம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவில் தற்போது 161 அடி உயரத்தில் பிரமாண்டமாக சீரமைக்கும் பணிகள் நடந்துகொண்டு வருகின்றது. இதனால் அந்த கோவிலில் வைப்பதற்கு மரத்தால் செய்யப்பட்ட ராமர் கோவிலின் மாதிரியை தயார் செய்து தர வேண்டும் என்று ஆர்டர் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் மரச் சிற்பக் கலைஞரான ரமேஷ் தலைமையில் 25-க்கும் அதிகமான மரச் சிற்பக் கலைஞர்கள் ஒன்றிணைந்து ராமர் கோவிலின் மாதிரியை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இவர்கள் கடந்த ஆறு மாதங்களாக இரவு, பகல் பாராமல் 3 அடி உயரத்தில் 340 தூண்களுடன் ராமர் மற்றும் சீதா கருவறையில் அழகாக இருப்பது போன்று மாதிரியை வடிவமைத்துள்ளனர். இந்த மாதிரி கோவிலின் அனைத்து வேலைப்பாடுகளும் தேக்கு மரத்தால் செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து இந்த ராமர் கோவிலின் மாதிரி சிற்பத்தை அயோத்தி உள்ள ராமர் கோவிலுக்கு லாரி மூலம் அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின் வருகின்ற 21 ஆம் தேதி ராமநவமி தினத்தன்று ராம பக்தர்கள் முன்னிலையில் சாதுக்கள், வைணவபட்டர்கள் போன்றோர் இணைந்து இந்த மாதிரி சிற்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து ராமர் கோவிலில் உள்ள வளாகத்தில் வைக்க உள்ளனர்.