துபாயில் இருந்து சென்னை விமானத்தில் கடத்திய ரூ. 2 கோடியே 90 லட்சம் மதிப்புள்ள 6 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த பயணிகளை சோதனை செய்துள்ளனர்.
இதனையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் அந்த விமானத்திற்குள் சென்று சோதனை செய்தபோது பயணிகள் அமர்ந்திருக்கும் இருக்கையில் ஒரு இருக்கை மட்டும் சற்று தூக்கிய நிலையில் இருந்துள்ளது. இதைக் கண்டு சந்தேகமடைந்த அதிகாரிகள் அதனை சரி செய்வதற்கு சென்ற போது அந்த இருக்கைக்கு கீழ் இரண்டு பார்சல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்துள்ளார்கள். அந்த இரண்டு பார்சல்களை அதிகாரிகள் பிரித்து பார்த்தபோது அதில் ரூ. 2 கோடியே 90 லட்சம் மதிப்புள்ள 6 தங்க கட்டிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதன்பிறகு சுங்க இலாகா அதிகாரிகள் 6 கிலோ எடை கொண்ட 6 தங்க கட்டிகளை பறிமுதல் செய்து உள்ளார்கள். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சுங்க இலாகா அதிகாரிகள் இந்த 6 தங்க கட்டிகளை கடத்தி வந்த மர்ம நபர்கள் யார் என்றும், எந்த காரணத்திற்காக இருக்கைக்கு கீழ் அதனை மறைத்து வைத்து விட்டு சென்றிருப்பார்கள் என்பது குறித்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.