நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். திரைப்பட படப்பிடிப்புகளில் பங்கேற்று வந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவர் மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இதனையடுத்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனில்லாமல் நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். அவரின் உடல் நேற்று மாலை 6 மணியளவில் 78 துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசியால் தான் இறந்ததாக தகவல் பரவி வரும் நிலையில், அவரது மரணம் குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். விவேக்கிற்கு ஏற்பட்டது சைலன்ட் ஹார்ட் அட்டாக்,இது ஒருவருக்கு ஏற்பட்டால் எந்த வழியையும் கொடுக்காமல் சட்டென்று இதயத்திற்கு செல்லும் ரத்தத்தை உறைய வைத்து கிட்னி, மூளை என பாகங்களையும் செயலிழக்க வைத்து விபரீத உயிர் இழப்பை ஏற்படுத்திவிடும் என்று விளக்கம் அளித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் விவேக் மறைவு குறித்து அவதூறு பரப்பினால் வழக்கு பதிவு செய்யப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். விவேக்கின் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி தான் காரணம் என சிலர் சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை பரப்பி வருவதாகவும், இதுகுறித்து கண்காணிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.