தென்காசியில் ஒரு பெண் கள்ள காதலனுடன் சேர்ந்து கணவரைக்கொன்று வீட்டில் குழி தோண்டி புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள குத்துக்கல்வலசை அருகில் உள்ள அண்ணா நகர் 9 ஆம் தெருவைச் சேர்ந்த அபிராமி என்ற பெண் அழகு நிலையம் சொந்தமாக நடத்தி வருகிறார். இவரது கணவர் தங்கராஜ். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் தங்கராஜ் உடல்நலம் பாதிப்படைந்து சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார்.
அதன்பிறகு அபிராமி, காளிராஜ் என்பவருடன் பழகி திருமணம் செய்துகொண்டு அவருடன் வாழ்ந்து வந்திருக்கிறார். இந்நிலையில் காளிராஜை காணாததால், அவரின் தாயார் அபிராமியிடம் கேட்டிருக்கிறார். அவர் வெளியூரில் பணியாற்றி வருவதாக அபிராமி கூறியிருக்கிறார்.
ஆனால் மூன்று வருடங்கள் கடந்த பிறகும் தன் மகன் திரும்பி வராததால் காவல்துறையினரிடம் காளிராஜின் தாய் புகார் தெரிவித்துள்ளார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அபிராமி தெரிவித்துள்ளதாவது, காளிராஜுடனான திருமணத்திற்குப் பிறகு மாரிமுத்து என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.
அது காளிராஜிற்கு தெரிந்ததால், இருவருக்கும் சண்டை ஏற்பட்டு, மாரிமுத்து காளிராஜ்ஜை அடித்து கொன்று விட்டு நண்பர்களுடன் சேர்ந்து வீட்டில் இருக்கும் தென்னை மரத்திற்கு அடியில் புதைத்து விட்டார் என்று அபிராமி தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து தென்காசி காவல் துணை கண்காணிப்பாளரான கோகுல கிருஷ்ணன் மற்றும் காவல் ஆய்வாளர் பாலமுருகன் போன்றோர் தலைமையில் ஜேசிபி வரவழைக்கப்பட்டு குழி தோண்டப்பட்டுள்ளது.
அதிலிருந்து காளிராஜின் உடல் எலும்பு கூடாக மீட்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அபிராமி, மாரிமுத்து மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.