தமிழகத்தில் உணவு விடுதி, தேநீர்க் கடைகள் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அது ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, மற்ற நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு என முக்கிய கட்டுப்பாடுகளை அறிவித்தது.
இதைத்தொடர்ந்து தேநீர் கடைகள், உணவு விடுதிகள் , காய்கறி, மளிகை கடைகள், வணிக வளாகங்கள், நகைக் கடைகள், ஜவுளிக்கடைகள் போன்றவை 50 சதவீத பணியாளர்களுடன் இரவு 9 மணி வரை மட்டும் இயங்க அனுமதி வழங்கியுள்ளது. பெட்ரோல் பங்குகள், டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதித்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் குறைந்த பட்சம் 50 சதவீத பணியாளர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அந்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.