திருநெல்வேலியில் மர்ம நபர்கள் லாரி டிரைவரை வழிமறித்து அவரிடமிருந்த பணத்தை பிடுங்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் லாரி டிரைவரான ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று லாரியில் சரக்கை ஏற்றிக்கொண்டு கோவையிலிருந்து புறப்பட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் நாங்குநேரி சுங்கச்சாவடியின் வழியாக செல்லாமல் அதன் அருகிலிருந்த மலைப்பாதை வழியாக சென்றுள்ளார்.
இந்நிலையில் அங்கு 3 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து லாரியை வழிமறித்துள்ளனர். அதன் பின் லாரி டிரைவரான ராஜேஷ்ஷை மிரட்டி அவரிடமிருந்த 5,000 ரூபாய் பணத்தை பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர். இச்சம்பவம் குறித்து ராஜேஷ் களக்காடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் மர்ம நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.