கிணற்றுக்குள் தவறி விழுந்த மகனையும், காப்பாற்ற சென்ற தந்தையையும் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு ராகவன் என்ற 3-ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளான். இந்த சிறுவன் பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் அருகில் உள்ள தோட்டத்தில் ராகவன் விளையாடி கொண்டிருந்தான். இந்நிலையில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் சுமார் 100 அடி ஆழம் உள்ள கிணற்றில் தவறி விழுந்துவிட்டான்.
இதனை பார்த்த ராகவனின் தந்தை பாலசுப்பிரமணியம் கிணற்றுக்குள் குதித்து தன் மகனை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து தண்ணீரில் தத்தளித்த தந்தை மற்றும் மகனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரில் தத்தளித்த தந்தையையும், மகனையும் பத்திரமாக உயிருடன் மீட்டுள்ளனர்.