மறைந்த முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடலுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி, வெங்கையா நாயுடு, எல்.கே அத்வானி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்
பாஜகவை சேர்ந்த முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் (67 வயது) கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் நேற்று இரவு திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. இவரது மறைவால் பாஜக அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா மற்றும் மாநில அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது மறைவுக்கு டெல்லியில் 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது
சுஷ்மா சுவராஜின் உடல் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக காலை 11 மணி வரை அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. பின்னர் சுஷ்மாவின் உடல் பாஜக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மதியம் 12 மணி முதல் 3 மணி வரை கட்சியினர் மரியாதை செலுத்த வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானி ஆகியோர் நேரில் சென்று மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.