மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே விஷம் குடித்த கூலித்தொழிலாளி சிகிச்சை பலன் அளிக்காமல் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் மெயின் ரோட்டில் தேவராயன் என்பவர் வசித்து வந்தார். இவர் உரக்கடையில் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து தேவராயன் வாணாதிராஜபுரம் பேருந்து நிலையம் அருகே மது போதையில் கிடப்பதாக செல்போனில் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தேவராயன் விஷம் குடித்ததாக கூறியுள்ளார்.
இதையடுத்து தஞ்சை தனியார் மருத்துவமனையில் அவர் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிர்ழந்தார். இதுகுறித்து குத்தாலம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.