ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என்று அறிவித்ததால் பொதுமக்கள் கூடிய கடையை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரியில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையின் திறப்பு விழாவில் ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என அறிவித்துள்ளனர். இதனால் பிரியாணி வாங்குவதற்காக சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அந்த கடைக்கு முன்பு மக்கள் குவிந்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அந்த கடைக்கு விரைந்து சென்று சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் நிற்பதால் கடையை மூடும் படி கூறியுள்ளனர்.
இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் தேர்தல் நேரத்தில் கொரோனா பரவவில்லையா என்றும், இப்போது மட்டும் தான் தொற்று பரவுமா என்றும் அதிகாரிகளுடன் தகராறு செய்துள்ளனர். இதனை அடுத்து அதிகாரிகள் அனைவருக்கும் பிரியாணி கொடுத்த பிறகு கடையை பூட்டி சீல் வைத்துவிட்டனர். இப்படி கடை திறந்த சில மணி நேரத்திலேயே அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.