கத்தியை காட்டி மிரட்டி வாலிபர் பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள கோட்டை தமிழர் தெருவில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மகேஸ்வரன் தனது சைக்கிளில் பொன்மலை மாஜி ராணுவ காலனி அருகே சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் வசிக்கும் பிரபு என்பவர் மகேஸ்வரனை வழிமறித்து ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். அதற்கு தன்னிடம் பணம் இல்லை என்று மகேஸ்வரன் கூறியதற்கு பிரபு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மகேஸ்வரனின் கழுத்தில் வைத்து மிரட்டி உள்ளார்.
அதன்பின் அவர் சட்டைப்பையில் வைத்திருந்த 650 ரூபாய் பணத்தைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து மகேஸ்வரன் பொன்மலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.