தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் கூக்கால் ஏரி பகுதியில் தனது குடும்பத்தினருடன் நடைபயிற்சி மேற்கொண்டார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மகன், மனைவி, மகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் கடந்த 16-ஆம் தேதி ஓய்வு எடுப்பதற்காக கொடைக்கானலுக்கு வந்தார். கொடைக்கானல் பகுதியில் உள்ள பாம்பார்புரம் நட்சத்திர ஓட்டலில் அவர்கள் தங்கியுள்ளனர். கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களை மு.க.ஸ்டாலின் அவ்வப்போது சுற்றுப்பயணம் செய்து பார்வையிட்டு வருகிறார். மேலும் அவர் ஏரிச்சாலையில் நடைப்பயிற்சியும் மேற்கொண்டார். அதேபோல் சுற்றுலா இடங்களை அவரது குடும்பத்தினரும் பார்வையிட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் முகஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் மேல் மலைப்பகுதியான கூக்கால் கிராமத்தில் உள்ள அழகிய ஏரி பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அவர் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தார். அதனைத் தொடர்ந்து மத்திய உரோம ஆராய்ச்சி நிலைய பண்ணைக்கு சென்றார். அங்கு வளர்க்கப்பட்டு வரும் முயல்கள், கம்பளி ஆடுகளை பார்வையிட்டார். அப்போது அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களிடம் முயல் மற்றும் கம்பளி ஆடு வளர்ப்பு குறித்து கேட்டறிந்தார். அதற்கு முன்னதாக மன்னவனூர் மற்றும் காவேரி பகுதி மக்கள் மு.க.ஸ்டாலின் வருகையை அறிந்து அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அதன்பின் குடும்பத்தினருடன் அவர் ஓட்டலுக்கு திரும்பினார்.