டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்த வாலிபரை கையும் களவுமாக பிடித்து விட்டனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள ராஜாவூர் பிரிவில் இருக்கும் டாஸ்மாக் கடையில் நாட்ராயன் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடையை பூட்டிவிட்டு நாட்ராயனும், உடன் பணிபுரியும் பணியாளர்களும் அருகில் தாங்கள் தங்கியிருக்கும் அறைக்கு சென்று விட்டனர். இதனையடுத்து அதிகாலை 1:30 மணி அளவில் நாட்ராயன் வெளியே வந்து பார்த்தபோது கடைக்கு முன்பு ஒரு மோட்டார் சைக்கிள் நின்றுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் பணியாளர்களுடன் இணைந்து அங்கு சென்று பார்த்த போது மூன்று பேர் கடைக்குள் இருந்து ஓடியுள்ளனர். இதனையடுத்து அந்த நபர்களை துரத்தி சென்று அதில் ஒருவரை பிடித்து விட்டனர்.
இதனை தொடர்ந்து கடைக்குள் சென்று பார்த்தபோது லாக்கர் உடைக்கப்பட்டு பணம் மற்றும் பொருட்கள் எதுவும் திருடு போகாமல் அப்படியே இருந்துள்ளது. இதுகுறித்து உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிடிப்பட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் ஜேசுதாஸ் என்பதும், தப்பியோடிய 2 பெரும் வேலுமணி, திலீப் ராஜா என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.