கலைஞர் கருணாநிதியின் சிலையை முரசொலி அலுவலகத்தில் வைத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்துள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், தி.மு.க. முன்னாள் தலைவர் , தமிழக அரை நூற்றாண்டு கால அரசியலின் மையப்புள்ளி , தமிழக அரசியலின் முக்கிய அத்தியாயம் என்று வர்ணிக்கப்படும் கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது. இதையடுத்து இன்று காலை திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.அதை தொடர்ந்து மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு ஸ்டாலின் மற்றும் திமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மேலும் கலைஞரின் நினைவை போற்றும் வகையில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கருணாநிதியின் சிலையை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திறந்து வைப்பதற்காக நேற்றே மம்தா பானர்ஜி சென்னை வந்த நிலையில், தற்பொழுது கலைஞர்கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார். இந்த சிலை திறப்புவிழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, மற்றும் கவிஞர் வைரமுத்து உட்பட ஏராளமான தலைவர்களும், பிரபலங்களும் கலந்து கொண்டனர். சிலையை திறந்து வைத்த மம்தா பானர்ஜி தற்பொழுது கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.